ஆசிரியர் திரு தியாகராஜன் ஐயா அவர்களின்
பொற் பாதங்களில் இக் கவிதையை சமர்ப்பிக்கிறேன்
***************************************************************************
மாசில்லா ரத்தினமே மலர் தூவும் புன் சிரிப்பே
வாய் மொழியும் வார்த்தையெல்லாம் நிறைத்திடுவீர் கனிவுடனே.
உள்ளத்தின் அழகில் முகம் ஜொலிக்கும்
உங்கள் கண்களில் என்றும் பரிவிற்கும்.
பொறுமை என்பதன் பொருள் கேட்டால்
அகராதி உங்கள் பெயர் கொடுக்கும்.
பொறுமையின் இலக்கணம் படித்திடவே நிலமகள்
சாளரம் அருகே செவி கொடுப்பாள்.
ஆறாம் வகுப்பு பாலகரும் அன்றே
உங்கள் அகரப் பாலை பருகிவிடுவர் நன்றே.
கற்றலில் கலங்கள் தென்படினும் நலமே
தெளியும் நீராய் வளர்த்தெடுப்பீர் நிலமே.
பெற்றவர் குருவாய் சில நேரம்
மூவரும் ஒன்றாய் எம்குருவே.
எட்டுத்திக்கும் பறந்து வரும்
எங்களுக்கு அங்கு ஏது நிறம்.
கத்திக் களித்து கூட்டினை அணைய
உங்கள் இல்லம் தானே போதிமரம்.
அன்னையென வந்த இணை மகிழ்ந்தோம்
வள்ளுவனுக்கு ஒரு வாசுகி போல் நெகிழ்ந்தோம்.
தெய்வங்கள் நடமாட நேரில் கண்டோம்
அருளாசி நிலைத்திருக்கும் கோவில் கண்டோம்.
மாற்றங்கள் பல நூறு நித்தம் மனிதருக்கு
காலத்தின் கோலம் என பதிலிருக்கு.
மாறாத மன மாண்பு வளர்வதுண்டு
மகா ஆத்மாக்களுக்கே என்னாலும் மலர்வதுண்டு.
மூப்படைந்தும் நெகிழாத பொன் நகையே
நின் வலியை பிறர் உணரா புன்னகையே.
தவம் கோடி செய்தோமா விண்ணில்
தங்களை யாம் பெற்றதற்கே இம்மண்ணில்.
பெருவுடையார் பெருமையெல்லாம் இராசராசனுக்கே சித்தம்
இச்சிறு உடையார் புகழ் மலர்கள் தியாகராசன் ஐயாவுக்கே மொத்தம்.
அன்புடன்
RK 01-03-2022